Sunday, February 28, 2010

ஒரே வெட்டு!


மதுரைக்குப் பக்கத்திலிருந்த அந்த கிராமத்தின் மையப்பகுதி. அடர்ந்த தோப்பின் நடுவில் பெரிய பண்ணைவீடு. முன்னால் பெரிய பண்ணை சங்கரபாண்டி சிந்தனையுடன் அமர்ந்திருக்க அருகில் அவர் மகன் நல்லமுத்து பவ்வியமாய். ஒரு மாதத்திற்கு முன் வாங்கிய ஸ்கார்பியோ ஜீப் பிரபல அரசியல் கட்சியின் கொடியுடன் தயாராய் நின்றிருந்தது.

காலை ஆறு மணிக்கே உரித்தான அமைதியை கிழித்துக்கொண்டு சங்கரபாண்டி மெல்லிய குரலில் கேட்டார். "என்னடா இன்னிக்கு வெட்டப் போகலாமா?"

''வெட்டிரலாம். நானும் கூட வர்றேன். இன்னிக்கு எப்படியும் கதையை முடிச்சிரணும். ரொம்பவேதான் வளர்த்து விட்டுட்டீங்க!''

திடீரென்று சங்கரபண்டியின் தந்தை கருப்பண்ணன் வெளியே வந்தார். அம்பாசடர் காரில் ஏறியவர் பக்கத்து கிராமம் வரை சென்று வருவதாக பொதுவாக கூறிவிட்டு கிளம்பினார்.

"டேய் பெரியவருக்கு தெரியாமல் வேலையை முடிக்கணும், இல்லைன்னா அவரும் கூட வந்து தலையை நீட்டுவாரு!'' என்று சங்கரபாண்டி நல்லமுத்துவிடம் கிசுகிசுத்தார்.

''வெட்டற இடம் புதுசு. டவுன் ஏரியா. எப்ப கூட்டம் இருக்காது அந்த இடத்திலேன்னு வெசாரிச்சிட்டியா?''

''அதெல்லாம் நம்ம டிரைவர் குமார் செய்துட்டான். மத்தியானம் ஒரு மணி தான் சரியா இருக்கும். ஈ காக்கை இருக்காது ரோட்டில.''

''சரி.''

சங்கரபாண்டி முன் இருக்கையிலும், நல்லமுத்து மற்றும் மூவர் பின் ஸீட்டில் அப்பிக்கொள்ள உறுமலுடன் கிளம்பியது ஸ்கார்பியோ. மதுரை மேலூர் ரோட்டில் உள்ள அந்த காம்ப்ளெக்ஸ் முன்னால் நிற்கும் போது நேரம் சரியாக ஒரு மணி.

டிரைவர் குமார் உள்ளே சென்று முதலில் நோட்டம் விட்டு தலையசைக்க, நல்லமுத்து வெளியே காவலுக்கு நிற்க சங்கரபாண்டி தன் நீண்ட நாள் ஆசையான டவுன் சலூனில் முடி வெட்டிக்கொள்ளவேண்டும் என்பதை நிறைவேற்றிக் கொள்ள உள்ளே சென்றார்.

10 comments:

  1. அட.....

    அப்படி போகுதா கதை??

    ஹா...ஹா...ஹா.... நான் கூட தல போட்டு தள்ள தான் போறாரோன்னு நெனச்சேன்...

    சூப்பர்... நல்லா எழுதி இருக்கீங்க ஷங்கர்....

    ReplyDelete
  2. ஒரு பக்கக் கதைக்கான அவ்வளவு அம்சங்களுடன் படிக்க பரபரப்பாக இருந்தது.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  3. ஒரே வெட்டா வெட்டிட்டீங்க!

    ReplyDelete
  4. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்பார்கள்.. இங்கே கல்கண்டாய் துண்டுகள்.. வருக.. நல்ல படைப்புகளைத் தருக..

    ReplyDelete
  5. இது சூப்பர் வெட்டா இல்ல இருக்கு. இன்னும் தொடர வாழ்த்துக்கள்.

    வெங்கட் நாகராஜ்
    புது தில்லி

    ReplyDelete
  6. நெஞ்சு ஒருபக்கம் , பக் பக் என்று அடித்துக்கொள்ள மற்றொருபக்கம் பயத்தினால் நாக்கு உலர்ந்துபோக , மனைவியோ திகில் கதைகளை படிக்கின்ற வயதா இப்போது என்று இடிக்க, நல்லவேளை முடிவை படித்ததும் உயர்ந்து கொண்டே சென்ற ரத்த அழுத்தம் நார்மலுக்கு வர நான் படைப்பாளியின் எழுத்து திறனை வியந்து கொண்டே உறங்கச் சென்றேன்.

    மந்தவெளி நடராஜன்.

    ReplyDelete
  7. கோவைனு பாத்ததும்... அட நம்ம ஊருகாரர் என்ன எழுதி இருக்கராருன்னு தலைய காட்ட வந்தேன்.... அடே தலைய வெட்டுற கதையோன்னு விறு விறுன்னு படிச்சா... கடசீல இப்படி குசும்பா முடிச்சுடீகளே... சரி சரி நம்ம ஊரு குசும்பு இல்லாமயா போயிரும்....ஹா ஹா ஹா

    ReplyDelete
  8. படித்து முடித்தவுடன் கழுத்தைத் தடவினேன்.அதில் ஒரு சொட்டு ரத்தம்!!

    ReplyDelete
  9. தலை தலையை நல்லா அழகா வெட்டினாரா?

    ReplyDelete
  10. ஸ்கார்பியோ எல்லாம் எடுத்துவந்து வெட்டியிருக்கீங்களே.

    தலை வெட்டிய தானைத்தலைவர் வாழ்க!

    ReplyDelete