Thursday, July 26, 2012

best quote

வணக்கம்  நண்பர்களே
நீண்ட இடைவெளிக்கு பிறகு 

Sunday, February 28, 2010

ஒரே வெட்டு!


மதுரைக்குப் பக்கத்திலிருந்த அந்த கிராமத்தின் மையப்பகுதி. அடர்ந்த தோப்பின் நடுவில் பெரிய பண்ணைவீடு. முன்னால் பெரிய பண்ணை சங்கரபாண்டி சிந்தனையுடன் அமர்ந்திருக்க அருகில் அவர் மகன் நல்லமுத்து பவ்வியமாய். ஒரு மாதத்திற்கு முன் வாங்கிய ஸ்கார்பியோ ஜீப் பிரபல அரசியல் கட்சியின் கொடியுடன் தயாராய் நின்றிருந்தது.

காலை ஆறு மணிக்கே உரித்தான அமைதியை கிழித்துக்கொண்டு சங்கரபாண்டி மெல்லிய குரலில் கேட்டார். "என்னடா இன்னிக்கு வெட்டப் போகலாமா?"

''வெட்டிரலாம். நானும் கூட வர்றேன். இன்னிக்கு எப்படியும் கதையை முடிச்சிரணும். ரொம்பவேதான் வளர்த்து விட்டுட்டீங்க!''

திடீரென்று சங்கரபண்டியின் தந்தை கருப்பண்ணன் வெளியே வந்தார். அம்பாசடர் காரில் ஏறியவர் பக்கத்து கிராமம் வரை சென்று வருவதாக பொதுவாக கூறிவிட்டு கிளம்பினார்.

"டேய் பெரியவருக்கு தெரியாமல் வேலையை முடிக்கணும், இல்லைன்னா அவரும் கூட வந்து தலையை நீட்டுவாரு!'' என்று சங்கரபாண்டி நல்லமுத்துவிடம் கிசுகிசுத்தார்.

''வெட்டற இடம் புதுசு. டவுன் ஏரியா. எப்ப கூட்டம் இருக்காது அந்த இடத்திலேன்னு வெசாரிச்சிட்டியா?''

''அதெல்லாம் நம்ம டிரைவர் குமார் செய்துட்டான். மத்தியானம் ஒரு மணி தான் சரியா இருக்கும். ஈ காக்கை இருக்காது ரோட்டில.''

''சரி.''

சங்கரபாண்டி முன் இருக்கையிலும், நல்லமுத்து மற்றும் மூவர் பின் ஸீட்டில் அப்பிக்கொள்ள உறுமலுடன் கிளம்பியது ஸ்கார்பியோ. மதுரை மேலூர் ரோட்டில் உள்ள அந்த காம்ப்ளெக்ஸ் முன்னால் நிற்கும் போது நேரம் சரியாக ஒரு மணி.

டிரைவர் குமார் உள்ளே சென்று முதலில் நோட்டம் விட்டு தலையசைக்க, நல்லமுத்து வெளியே காவலுக்கு நிற்க சங்கரபாண்டி தன் நீண்ட நாள் ஆசையான டவுன் சலூனில் முடி வெட்டிக்கொள்ளவேண்டும் என்பதை நிறைவேற்றிக் கொள்ள உள்ளே சென்றார்.