Sunday, February 28, 2010

ஒரே வெட்டு!


மதுரைக்குப் பக்கத்திலிருந்த அந்த கிராமத்தின் மையப்பகுதி. அடர்ந்த தோப்பின் நடுவில் பெரிய பண்ணைவீடு. முன்னால் பெரிய பண்ணை சங்கரபாண்டி சிந்தனையுடன் அமர்ந்திருக்க அருகில் அவர் மகன் நல்லமுத்து பவ்வியமாய். ஒரு மாதத்திற்கு முன் வாங்கிய ஸ்கார்பியோ ஜீப் பிரபல அரசியல் கட்சியின் கொடியுடன் தயாராய் நின்றிருந்தது.

காலை ஆறு மணிக்கே உரித்தான அமைதியை கிழித்துக்கொண்டு சங்கரபாண்டி மெல்லிய குரலில் கேட்டார். "என்னடா இன்னிக்கு வெட்டப் போகலாமா?"

''வெட்டிரலாம். நானும் கூட வர்றேன். இன்னிக்கு எப்படியும் கதையை முடிச்சிரணும். ரொம்பவேதான் வளர்த்து விட்டுட்டீங்க!''

திடீரென்று சங்கரபண்டியின் தந்தை கருப்பண்ணன் வெளியே வந்தார். அம்பாசடர் காரில் ஏறியவர் பக்கத்து கிராமம் வரை சென்று வருவதாக பொதுவாக கூறிவிட்டு கிளம்பினார்.

"டேய் பெரியவருக்கு தெரியாமல் வேலையை முடிக்கணும், இல்லைன்னா அவரும் கூட வந்து தலையை நீட்டுவாரு!'' என்று சங்கரபாண்டி நல்லமுத்துவிடம் கிசுகிசுத்தார்.

''வெட்டற இடம் புதுசு. டவுன் ஏரியா. எப்ப கூட்டம் இருக்காது அந்த இடத்திலேன்னு வெசாரிச்சிட்டியா?''

''அதெல்லாம் நம்ம டிரைவர் குமார் செய்துட்டான். மத்தியானம் ஒரு மணி தான் சரியா இருக்கும். ஈ காக்கை இருக்காது ரோட்டில.''

''சரி.''

சங்கரபாண்டி முன் இருக்கையிலும், நல்லமுத்து மற்றும் மூவர் பின் ஸீட்டில் அப்பிக்கொள்ள உறுமலுடன் கிளம்பியது ஸ்கார்பியோ. மதுரை மேலூர் ரோட்டில் உள்ள அந்த காம்ப்ளெக்ஸ் முன்னால் நிற்கும் போது நேரம் சரியாக ஒரு மணி.

டிரைவர் குமார் உள்ளே சென்று முதலில் நோட்டம் விட்டு தலையசைக்க, நல்லமுத்து வெளியே காவலுக்கு நிற்க சங்கரபாண்டி தன் நீண்ட நாள் ஆசையான டவுன் சலூனில் முடி வெட்டிக்கொள்ளவேண்டும் என்பதை நிறைவேற்றிக் கொள்ள உள்ளே சென்றார்.

Sunday, January 17, 2010

நண்பரின் நண்பர்

அப்பொழுது நான் கோவை கல்லூரியில் இறுதி ஆண்டு மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தேன். தொழிற்சாலை விசிட்டுக்காக பம்பாய் நகரம் தேர்வு செய்யப்பட்டு கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெறப்பட்டது .கோவையிலிருந்து பம்பாய்க்கு ரயிலில் சென்றடைந்தோம். ஆசிரியருடன் சேர்த்து ஐம்பது பேர் தங்குவதற்கு தமிழ்ச் சங்கம் மூலமாக மாதுங்கா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .என் நண்பன்ஒருவன் மூலமாக திரு .கந்தசாமி என்ற பம்பாய் தமிழரின் முகவரியை வாங்கிவைத்திருந்தேன் .அவர் விக்டோரியா டெர்மினஸ் அருகே ஒரு கடை வைத்திருந்தார் .தொழிற்சாலை விசிட் முடிந்தபின்எங்களுக்கு இரண்டு நாள் ஊரைச் சுற்றிப் பார்க்க அனுமதி கிடைத்தது. திரு.கந்தசாமி அவர்களிடம் ஐடியா கேட்கலாம் என்று அவரின் கடைக்குச் சென்றோம். ஆனால் அவர் அப்போது கடையில் இல்லை. எங்கோ வெளியே சென்றிருந்தார் .சரி நாமே நகரத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று நண்பர்கள் பத்து பேராக கிளம்பினோம்.

எல்லோருமாக காலணிகள் வாங்கலாம் என்று தீர்மானித்து சர்ச் கேட் பகுதிக்கு சென்றோம் .அங்கு கொஞ்சம் சீப்பாக காலணிகள் கிடைக்கும் என்று ஏற்கனவே எங்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது .நாங்கள் எங்களுக்கு தெரிந்த பட்லர் ஹிந்தி யில் பேசி வெவ்வேறு கடைகளுக்கு சென்று காலணிகளை வாங்கிக்கொண்டிருந்தோம். திடீரென்று பக்கத்துக் கடையில் பொருட்கள் வாங்கிகொண்டிருந்த என் நண்பர்கள் ஓடிவந்து தங்கள் பணம் ஆயிரத்து ஐநூறை கடைக்காரர் பிடுங்கிக் கொண்டதாக கூறினர். அவர்களை விசாரித்ததில் அந்த கடையில் பொருட்களை என் நண்பர்கள் பாதி விலைக்குக் கேட்டதும் அதனால் கடைக்காரர் பணத்தை பிடுங்கிக் கொண்டதும் தெரிந்தது .உடனே அந்தக் கடைக்கு சென்று விசாரித்ததில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறிய அந்த தாடிக்காரக் கடைக்காரர் எங்களை அங்கிருந்து விரட்டுவதிலேயே குறியாய் இருந்தார். நாங்கள் தமிழில் பேச, கடைக்காரர் ஹிந்தியில் பேச, கடைக்காரர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டனர் .வேறு வழியில்லாமல் நாங்கள் நேராக கந்தசாமியின் கடைக்குச் சென்றோம் .நல்ல வேளையாக கடையில் அவர் இருந்தார் .அவரை முதல் முறையாக அப்போதுதான் பார்த்தோம்.மாநிறமாக ஒல்லியாக இருந்தார். அவரிடம் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். எங்களை நன்றாக உபசரித்தார் .அவரிடம் பேசியதில் அவரின் சொந்த ஊர் திருநெல்வேலி என்பதும் பம்பாய் வந்து முப்பது வருடங்கள் ஆனதும் தெரிந்தது. என் நண்பன் மற்றும் அவரின் தந்தையைப்பற்றி விசாரித்தார். அதன் பின்பு நடந்த விஷயங்களை அவரிடம் கூறினோம் .சிறிது நேரம் யோசித்தார் .பிறகு தொலைபேசியில் யாருக்கோ தகவல் பறந்தது. சில நிமிடங்களில் பத்து பேருடன் முன்று கார்கள் அங்கே வந்து நின்றது.எங்கள் எல்லோருக்கும் சற்று பயமாகத்தான் இருந்தது .சரி என்ன நடந்தாலும் பார்த்து விடுவோம் என்று நானும் பணம் பறிகொடுத்த நண்பர்கள் ஒரு காரிலும், கந்தசாமி மற்றும் அவருடன் பத்து பேர் மற்ற கார்களில் சர்ச் கேட் பகுதிக்குச் சென்றோம். சம்பந்தப்பட்ட கடையை அவரிடம் காட்டினோம் .இவரைப் பார்த்தவுடன் அங்கிருந்த கடைக்காரர்கள் ஒரு வித மரியாதையுடன் இவரை அணுகுவதும் அதில் ஒரு கடைக்காரர் தமிழில் பேசுவதும் தெரிந்தது .சிலநிமிடங்கள் ஹிந்தியில் அந்த கடைக்காரர்களிடம் ஏதோ மிரட்டும் தொனியில் கந்தசாமி பேசினார். உடனே என் நண்பர்களிடம் பணத்தை பறித்த கடைக்காரர் ஓடிவந்து பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு தெரியாமல் தவறு செய்து விட்டதாக மன்னிப்பு கோரினார் .பிறகு கந்தசாமி அவர்கள் எவ்வளவோ வேலைகள் இருந்தும் அன்று முழுவதும் எங்களுடனே இருந்து எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க உதவி செய்தார். இரவு லேட்டாக ரூமுக்குப் போய்ச் சேர்ந்தோம். எங்களுடைய ஆசிரியர்களும் சக நண்பர்களும் எங்களைக் காணாமல் தவித்துப் போய் விட்டனர். அவர்களிடம் நடந்த சம்பவங்களை விவரமாகக் கூறினோம். ஆசிரியர்கள் முதலில் எங்களைக் கடிந்து கொண்டாலும் பின்னர் பம்பாய் வரையிலும் பெரிய மனிதர்களை தெரிந்து வைத்து இருக்கிறீர்களே! பரவாயில்லியே என்று பாராட்டினர் .திரு.கந்தசாமி மற்றும் அவர் முகவரி கொடுத்த கோவை நண்பனையும் என்றுமே என்னால் மறக்க முடியாது. --

Friday, January 1, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்
வளமான வலிமையான மனநிறைவான புத்தாண்டு அமைய
வாழ்த்துக்கள்