Sunday, December 27, 2009

ஓடிய ஓட்டம்

அப்பொழுது எனக்குப் பதினைந்து வயது. கோவை ராம் நகரில் உள்ள சபர்பன் ஹையர் செகண்டரி பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். அது என்னுடைய பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்திருந்த சமயம். என் நண்பர்கள் எல்லாம் ஜாலியாக ஊர் சுற்றப் போய் விட்ட போது நான் மட்டும் வீட்டுக்கு நல்ல பிள்ளையாக தினமும் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டு சிறந்த ஓட்டப் பந்தய வீரன் ஆகலாம் என்று தீர்மானித்து அதற்காக முந்தின நாளே கர்ம சிரத்தையாக கொண்டைக் கடலையைதண்ணிரில் ஊறவைத்துவிட்டுப் படுத்தேன்.

மறுநாள்...

அலாரம் வைத்து அதிகாலையில் எழுந்து கடலையை சாப்பிட்டுவிட்டு ஓடுவதற்குத் தயாரானேன். இரண்டு கிலோமீட்டர் மெதுவாக ஓடி பயிற்சி எடுக்கலாம் என்று முடிவெடுத்துத் தொடங்கினேன்.சிறிது தூரம்தான் ஓடி இருப்பேன். பின்னால் எதோ சப்தம் கேட்கவே திரும்பிப் பார்த்த நான் திடுக்கிட்டேன்.பத்து பதினைந்து நாய்கள் ஒரு படையாக புறப்பட்டு வந்து என்னைத் துரத்த ஆரம்பித்தது. என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அன்று நான் ஓடிய ஓட்டத்தை ஒலிம்பிக்கில் ஓடி இருந்தால் இந்தியாவுக்கு தங்கப்பதக்கமே கிடைத்திருக்கும். ஹூம் ! நாய்களால் ஒரு சிறந்த ஓட்டப் பந்தய வீரர் உருவாவது தடுக்கப்பட்டுவிட்டதே! என்ன செய்ய?

Friday, December 25, 2009

ஏமாற்றம்

நிறுத்தத்தில் காத்திருந்தேன்
பேருந்துக்காக .
நிற்காமல் சென்றது
முதல் பேருந்து .
அடுத்து வந்ததோ
ஏகக் கூட்டம் !
காலியாக வந்த
மூன்றாவது பேருந்தை நோக்கி
ஓடிய ஓட்டம் சோதனை ஓட்டமாய் முடிந்தது .